Monday, 29 April 2013

Mayavaram Thoughts

எனக்கு நல்ல கவிதைகளை ரசிக்கத்தான் தெரியுமே தவிர, எழுத ஏனோ மனமில்லை.  காரணம், கவிதை எழுதுவதென்பது, பொழுதுபோகாமல் டீ குடிப்பது போன்ற விஷயமல்ல.  அதற்கு கற்பனை ஊற்றும் பெரிய வாசிப்பும் வேண்டும்.  ஆனால், இன்றைக்கு பத்திரிக்கைகளில் வரும் பல கவிதைகளை பார்த்துவிட்டு, பல சமயங்களில் வாய்விட்டு சிரிப்பேன்! அந்த கவிதைகளில் உள்ள நகைச்சுவைக்காக அல்ல.. இதையெல்லாம் கவிதை என்று தைரியமாக எழுதுகிறார்களே! என்று.  இப்படிபட்ட இரண்டுங்கெட்டான் கவிதைகளை படிக்கும்போதெல்லாம் நானும் அவர்கள் பாணியிலேயே எழுதி, நண்பர்களிடம் காட்டி சிரிப்பேன்.  "கவிதைகளில் நையாண்டியென்பது அபூர்வம்.  அந்த கிண்டல் உங்களுக்கு அமர்க்களமாக வருகிறது.  சும்மா அவ்வப்போது எழுதுங்கள்.  அப்படியாவது இந்த லூசு கவிஞர்கள் கொஞ்சம் திருந்தமாட்டார்களா" என்று எனது சில நண்பர்கள் கூறியதின்பேரில் கவிஞர் காத்துவாயன் என்ற பெயரில் நிறைய கவிதைகளை குமுதத்தில் எழுதினேன்.  இப்போது TV mediaவிற்கு வந்த பிறகும், எழுதி நண்பர்களிடம் காட்டிவிட்டு கிழித்துவிடுவேன்.

இதில் உச்சகட்ட காமெடி, என் கவிதைகளை படித்துவிட்டு, ஒரு M.Phil. ஆராய்ச்சி மாணவன், "சார், ரொம்ப கஷ்டபட்டு உங்கள் தொலைபேசி நம்பரை வாங்கினேன்.  உங்கள் கவிதைகள் பற்றி ஆராய்ச்சி செய்யலாம் என்று எங்கள் பேராசிரியரிடம் அனுமதி வாங்கிவிட்டேன். பேசலாமா?" என்று ஒருநாள் phone-ல் கேட்டபோது, எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. இது build-up இல்லை, உண்மை. ஒரு வழியாக அவரது விபரீத ஆசையை புரியவைத்து அனுப்பி வைத்தேன்.

இந்த blog-ல் எனக்கு தோணும்போதெல்லாம் 'கவிதை' எழுதுவேன்.  சிந்தனைகளை அள்ளி விடுவேன். முடிந்தால் சிரியுங்கள். புரிந்துகொள்ளாமல் சொல் குற்றம், பொருள் குற்றம் என்று பாதி ராத்திரியில் பதிலனுப்பினால், நான் ஏற்கனவே சொன்ன கோமாளி பட்டியலில் உங்களையும் சேர்க்கவேண்டி வரும்.

No comments:

Post a Comment