Thursday, 2 May 2013

வேடிக்கை மனிதர்கள்

நம்மூர் தெருக்களில் நீங்கள் நன்றாக கவனித்தால், எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் சுற்றுகிறது. இந்த வேடிக்கை புத்தி நம்மூர்காரனுக்கு மட்டுந்தானா? வெளிநாட்டுகாரனுக்கும் உண்டா? என்ற யோசனை எனக்கு அடிக்கடி தோன்றி மறையும். அது கல்யாண ஊர்வலமா இருக்கட்டும், யாரோ ஒரு ஏழை அடிபட்டு ரத்தம் சொட்ட கெடக்கட்டும்... எல்லாத்தையும் கூடி கூடி வேடிக்கை பார்க்கிறானுக. சரி.., பிரச்சனைக்கு போலிஸ் ஸ்டேஷன் வரணும்னா, 'ஐயோ, நமக்கு ஏங்க வம்பு?'னு சட்டுனு நடைய கட்டுவானுக. நான் கேக்குறேன் 'உன்னால ஸ்டேஷனுக்கெல்லாம் வரமுடியாதுல்ல? அப்புறம் என்ன ________க்கு வேடிக்கை பாக்குற? உனக்கு எல்லமே time passஆ?  உன்னால traffic jam ஆகி ரோட்ல போகிறவனுக்கும் அவஸ்தை. அதாவது நம்மாளு ஓசில பொழுதுபோக்கணும்னா எதுக்கும் தயார்.

இதைவிட மோசம், கிராமத்தில... அது எப்படிதான் வராங்களோ தெரியல்ல..? அடிதடில ஈடுபட்டவன் சமரசமா போனா கூட இவன் சமாதானம் ஆகமாட்டேங்கிறான்.  அதுவும், பல டீக்கடைகள்-ல இதுக்குன்னே ஒரு கூட்டம் காத்திட்டிருக்கு.  இந்த விஷயத்தை ஒரு மனோதத்துவ டாக்டர்கிட்ட கேட்கணும்னு ஆசை. ஆனா, பிரச்சனை அந்த விஷயத்தை சுலபமா சொல்லாம, அதுக்கு ஏதேதோ medical term சொல்லி நமக்கு புரிஞ்சதையே வேற மாதிரி சொல்லி தலைகாய வைப்பாங்களோன்னு யோசனையா இருக்கு.

அடுத்த முறை, ரோட்ல ஏதாவது விபரீதம்னா, முடிஞ்சா உதவுங்க. இல்லாட்டா, பஸ்ஸிலேர்ந்து கொக்கு மாதிரி தலைய நீட்டி வேடிக்கை பார்க்கிற அளவுக்கு ஆர்வம் காட்டாதீங்கப்பா.

நீ யார்?

ஒவ்வொரு அநீதிக்கு
எதிராகவும் உன் உடம்பு
உதறினால், நீ -
என் இயக்க தோழன் - சே குவாரா

ஒவ்வொரு அழகியை
பார்க்கும்போதும் உன் உடம்பு
உதறினால், நீ -
உதை வாங்கப் போகும் தோழன்

ஓ,,, கிராமங்களே!

வளைந்து நெளிந்த ஓடை
மீன் பிடிக்கும் சோம்பேறி கிழவன்
ஒற்றையடி பாதை
'ம்மே' என்று ஈன ஸ்வரத்தில்
அழைக்கும் ஆடுகள்...!
பச்சை பசேல் வயல் வெளிகள்...
தலையாட்டும் கதிர்கள்

வரப்பில் சுற்றும்
அழுக்கு டிராயர் பையன்கள்
தூரத்தில்
படத்துக்கு பாட்டு போட்டு
அழைக்கும் டெண்ட் தியேட்டர்!
அனல் கக்கினாலும்
அழகாகக காட்சிதரும்
அந்தி சூரியன்...
சிலுசிலுவென...
இதமான மாலை குளிர்
எங்கோ டவுன் பஸ்ஸின் அலறல்
- ஓ என் அழகு கிராமங்களே
நீங்கள் வாழ்க
நீங்கள் வாழ்ந்தால்தான்
எங்கள் தமிழ் கவிஞர்கள்
வாழ்வார்கள்.

நீயூஸ் ரீடர்

குண்டு மல்லி வைத்தவள்
குண்டு வெடித்த கதையை
குறு நகையுடன் கூறிவிட்டு
அடுத்த செய்திக்குப் போகிறாள்
அவளுக்கு,
இன்னொரு செய்தி
இன்னொரு நாள்
இன்னொரு காலை.

எட்டு மணி நேரம் ஓட்டிய பின்...
வீட்டுக்குப் போகவேண்டும்
வீட்டுக்காரர் காத்திருப்பார்
வாழ்க்கையில் எல்லாமே
மறத்து போய்விட்டது -
அது நம்மை தொடாதவரை!

Monday, 29 April 2013

Mayavaram Thoughts

எனக்கு நல்ல கவிதைகளை ரசிக்கத்தான் தெரியுமே தவிர, எழுத ஏனோ மனமில்லை.  காரணம், கவிதை எழுதுவதென்பது, பொழுதுபோகாமல் டீ குடிப்பது போன்ற விஷயமல்ல.  அதற்கு கற்பனை ஊற்றும் பெரிய வாசிப்பும் வேண்டும்.  ஆனால், இன்றைக்கு பத்திரிக்கைகளில் வரும் பல கவிதைகளை பார்த்துவிட்டு, பல சமயங்களில் வாய்விட்டு சிரிப்பேன்! அந்த கவிதைகளில் உள்ள நகைச்சுவைக்காக அல்ல.. இதையெல்லாம் கவிதை என்று தைரியமாக எழுதுகிறார்களே! என்று.  இப்படிபட்ட இரண்டுங்கெட்டான் கவிதைகளை படிக்கும்போதெல்லாம் நானும் அவர்கள் பாணியிலேயே எழுதி, நண்பர்களிடம் காட்டி சிரிப்பேன்.  "கவிதைகளில் நையாண்டியென்பது அபூர்வம்.  அந்த கிண்டல் உங்களுக்கு அமர்க்களமாக வருகிறது.  சும்மா அவ்வப்போது எழுதுங்கள்.  அப்படியாவது இந்த லூசு கவிஞர்கள் கொஞ்சம் திருந்தமாட்டார்களா" என்று எனது சில நண்பர்கள் கூறியதின்பேரில் கவிஞர் காத்துவாயன் என்ற பெயரில் நிறைய கவிதைகளை குமுதத்தில் எழுதினேன்.  இப்போது TV mediaவிற்கு வந்த பிறகும், எழுதி நண்பர்களிடம் காட்டிவிட்டு கிழித்துவிடுவேன்.

இதில் உச்சகட்ட காமெடி, என் கவிதைகளை படித்துவிட்டு, ஒரு M.Phil. ஆராய்ச்சி மாணவன், "சார், ரொம்ப கஷ்டபட்டு உங்கள் தொலைபேசி நம்பரை வாங்கினேன்.  உங்கள் கவிதைகள் பற்றி ஆராய்ச்சி செய்யலாம் என்று எங்கள் பேராசிரியரிடம் அனுமதி வாங்கிவிட்டேன். பேசலாமா?" என்று ஒருநாள் phone-ல் கேட்டபோது, எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. இது build-up இல்லை, உண்மை. ஒரு வழியாக அவரது விபரீத ஆசையை புரியவைத்து அனுப்பி வைத்தேன்.

இந்த blog-ல் எனக்கு தோணும்போதெல்லாம் 'கவிதை' எழுதுவேன்.  சிந்தனைகளை அள்ளி விடுவேன். முடிந்தால் சிரியுங்கள். புரிந்துகொள்ளாமல் சொல் குற்றம், பொருள் குற்றம் என்று பாதி ராத்திரியில் பதிலனுப்பினால், நான் ஏற்கனவே சொன்ன கோமாளி பட்டியலில் உங்களையும் சேர்க்கவேண்டி வரும்.